ஈரான் மீதான தாக்குதல் தவிர்க்கப்படலாம்: ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது மிகவும் சாத்தியமற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் இந்நிலை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடத்தை தெரிவித்துள்ளார்.
முன்வைக்கும் நிபந்தனைகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“அவர்கள் வலுவான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்களா என்பதைப் பொறுத்தே இது அமையும்.

பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட்டு வலுவான உடன்படிக்கையில் கையெழுத்திட்டால் மட்டுமே இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க முடியும்.
தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தத் தயங்கப்போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், அங்கு மூன்று அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ இழப்புகள்
ஈரானின் இராணுவ இழப்புகள் குறித்து ட்ரம்ப் வெளியிட்ட புள்ளிவிவரங்களில், ஈரானில் உள்ள 38 பாலங்கள் அமெரிக்காவின் இலக்கில் இருப்பதாகவும் விருப்பப்பட்டால் ஒரே மணி நேரத்தில் அவற்றைத் தகர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அமெரிக்க தாக்குதல்களால் ஈரானின் ஏவுகணைத் திறனில் 10 சதவீதமும் மற்றும் ட்ரோன் திறனில் 15 சதவீதமும் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாக ட்ரம்ப் உரிமை கோரியுள்ளார்.

ஈரான் மீதான இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வை எட்டுவதற்கு இரு நாடுகளும் மறைமுக முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இருப்பினும் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் நகர்வுகள் காரணமாக ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றமான சூழலே நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |