யாழில் வைத்திய துறையில் தொடரும் முறைகேடு: அம்பலமாகும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்
2021 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பலாலி வீதியில், கந்தர் மடம் சந்திக்கு அருகாமையில் உள்ள மருந்தகம் ஒன்றுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,
2017 ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் பிரகாரம், வைத்தியசாலைக்கு அருகே இல்லாத மருந்தகம் ஒன்றுக்கு அனுமதி வழங்குவதாயின் இரண்டு மருந்தகங்களுக்கு இடையே 250 மீற்றர்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நியதி காணப்படுகிறது.
ஆனால் பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் ஏற்கனவே இரண்டு மருந்தகங்கள் உள்ள நிலையில் 2021ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் புதிய மருந்தகம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட மருந்தகத்துக்கான பாதை வழியை சுற்றுப் பாதையால் அடையாளப்படுத்தி (வழமையாக கூகுள் map மூலமே அளவிடும் முறை உள்ளது, ஆனால் நடைப்பயிற்சி மூலம் உடல் நிறை குறைக்கும் செயலி மூலம் அளவிட்டு தூரத்தை அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டது) ஒரு மருந்தகத்தில் இருந்து 302 மீற்றர்கள் தூரம் என்றும் மற்றைய மருந்தகத்தில் இருந்து 306 மீற்றர்கள் தூரம் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், மூன்று மருந்தகத்துக்கும் பிரதான பாதையாக பலாலி வீதி காணப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மருந்தக உரிமையாளர், இரு மருந்தகங்களுக்கு இடையே எந்த வகையில் அளவீடு செய்தீர்கள் என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அக்காலத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாராக கடமையாற்றியவரை வினவியவேளை, அதனை அளவிடுவதற்கு முறைமை ஒன்று இல்லை என பதில் வழங்கியுள்ளார்.
இதே கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் வினவியவேளை 250 மீற்றர்கள் இடைவெளி தேவை என்றும், கூகுள் Map மூலம் அளவிடப்படும் என்றும் எழுத்துமூல பதில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள மருந்தகங்களுக்கு இடையே உரிய தூர இடைவெளி இல்லாத நிலையில், அதனை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தும், அப்பகுதிக்கு பொறுப்பான யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உணவு மருந்து பரிசோதகர் அனுமதி வழங்க முடியாது என அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், வேறொரு இடத்திற்கு பொறுப்பான யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உணவு மருந்து பரிசோதகர், 300, பழம் வீதி கந்தர்மடம் என்ற மாற்று பாதை மூலம் அடையாளப்படுத்தி அனுமதி வழங்கியுள்ளார்.
ஆனால் 300, பழம் வீதி கந்தர்மடம் என்று ஒரு பதிவில் வீதி இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன், இந்த இரண்டு உணவு மருந்து பரிசோதகர்களுக்கும் அக்காலத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக இருந்தவரே கடமை இடங்களை பிரித்து கொடுத்து கையொப்பமிட்டுள்ளார்.
இந்த பிரச்சினைகள் அனைத்தும் குறித்த அந்த காலப்பகுதியில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமை புரிந்தவருக்கு எழுத்துமூலமான முறைப்பாடாக வழங்கியும் அவர் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம், சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகப்பிரிவு வைத்தியர் அர்ச்சுணா யாழில் வைத்திய துறையில் மேற்கொள்ளப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தியிருந்ததை தொடர்ந்து இவ்வாறான ஊழல் செயற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |