இப்படியாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா…
ஈழத்தில் தாய்மார்கள் தமது புத்திரர்களைக் காண சிந்துகின்ற கண்ணீரில் ஈழத் தீவு மிதந்து கொண்டிருக்கிறது. ஈழம், இன்று பெருத்தவொரு சோகத்தில் இருக்கிறது. சாந்தன் அவர்கள், தாயகம் திரும்புவார் என்று காத்திருந்த வேளையில் அவர் இயற்கை எய்தினார் என்கிற செய்தி உலகத் தமிழர்களை உலுக்கியுள்ளது.
சாந்தனின் தம்பி, மதிசுதா சாந்தனின் இழப்பு குறித்து தன் தாயிடம் சொல்ல இரண்டு நாட்களாவது அவகாசம் தேவை என்று குறிப்பிட்ட செய்தியின் துயர் சாதாரணமானதல்ல. உண்மையில் நம் தாய்மார்களிடம் அவர்களின் புத்திரர்களின் நிலை குறித்து சொல்ல முடியாதவொரு துயரம் இன்று ஈழநிலமெங்கும் விரிந்து கிடக்கிறது.
தாமதமாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களில் ஒருவர்தான் சாந்தன். இவர் மிக நீண்ட சிறைவாசத்தை அனுபவித்த நிலையில், தனது ஒட்டுமொத்த இளமையும் வாழ்வும் சிறையில் கழிந்த நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
என்ற போதும் சாந்தன், முருகன், ராபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
தம்மை தமது சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதை இவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். என்றபோதும் அரச நடைமுறைகளை காரணம் காட்டி இவர்களின் விடுவிப்புமீது கடந்த பல மாதங்களாக தடை போடப்பட்டன.
ஏழு தமிழர்களின் சிறையிருப்பும் அவர்களுக்கும் ராஜீவ் காந்தி படுகொலைக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் கடந்த 32 ஆண்டுகளாக நடக்காத விவாதமில்லை. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளனும் ஒருவர்.
இவர்கள் குற்றமற்றவர்கள் என்பது தொடர்பிலும் அரசுகளின் நிர்ப்பந்தங்களால் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள் என்பது தொடர்பிலும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பலர் தமது ஓய்வுக் காலத்தில் ஒப்புகொண்டார்கள்.
நீதி செத்துவிடக்கூடாது என்பதற்காகவும் அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இவர்கள் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, தமது மனசாட்சிற்கு உண்மையாய் இருப்பதற்காக இந்த உண்மைகளை ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
32 ஆண்டுகளின் பின்னரான தீர்ப்பு
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பல ஆண்டுகள் சிறையில் தமது வாழ்வை கழித்த நிலையில் மரண தண்டனை ஆயுள் தண்டணையாகக் குறைக்கப்பட்டது.
ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அனுபவித்த நீண்ட கால சிறைவாசம் என்பது மிகப் பெரிய தண்டனை என்றும் தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் இத் தீர்மானத்தை முன்மொழிய அனைத்து கட்சிகள் உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என்ற போதும் தமிழ்நாட்டின் ஆளுநர் விடுவிப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திடாதிருந்தார். ஏழு தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தெடுத்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 15 மாதங்களுக்கு முன்னர் ஏழு தமிழர்களையும் விடுவிக்கும் தீர்ப்பினை அளித்தது. இதனையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட போதும் சாந்தன், முருகன் உள்ளிட்ட இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டதாகவே சாந்தன் உள்ளிட்டவர்களின் நிலை அமைந்தது.
முற்கூட்டியே எச்சரித்த ராபட்
இங்கேயே சாகப் போகிறோம் என்று ஏழு தமிழர்களின் ஒருவரான ராபட் பயஸ் எச்சரித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். “சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில்தான் அடைத்தார்கள். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது…” என்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடைப் பயிற்சி செய்து தமது உடல் நலத்தை கவனிக்கவோ, நண்பர்களுடன் பேசி தமது உள நலத்தை மேம்படுத்தவோ அனுமதிக்கப்படவில்லை என்றும் ராபட் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார். பல மாதங்களாக ஒரே அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனது உடலில்கூட பல நோய்கள் வந்துவிட்டதாகவும், திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்தபோது இரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி, இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள் என்றும் ராபட் எழுதியுள்ளார்.
“அதே நிலை தொடர்ந்தால் நாம் இங்கேயே இறப்பது உறுதி இதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்…” என்று ராபட் அன்றே தமிழ்நாடு முதலமைச்சருக்கு எச்சரித்து எழுதிய விடயமே திரு சாந்தனின் மரணத்தில் நிகழ்ந்தேறி இருக்கிறது.
இலங்கை அரசு கடவுச்சீட்டு அனுமதி வழங்கி வருகின்ற போதும் அதனை சென்று பெற அனுமதிக்கவில்லை என்பதும் ராபட்டின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறதா..
இலங்கை கடலால் சூழப்பட்ட நாடு. ஆனால் இலங்கை கண்ணீரால் சூழப்பட்ட நாடு என்றும் கண்ணீரில் மிதக்கும் நாடு என்றும் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஈழத்தில் உள்ள பல தாய்மார்கள் தமது புத்திரர்களின் வருகைக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டும், இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தும், இலங்கை அரச படைகளிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக தினமும் கண்ணீருடன் போராடியே சாகிற தாய்மார்களினதும் தந்தைமார்களினதும் துயரால் ஈழத் தீவு நனைந்துகிடக்கிறது.
இதில் சாந்தின் தாயைப் போன்றவர்கள் இந்தியாவில் இருந்து தமது பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என்ற புத்திர சோகத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
உயிருடன் தன் மகன் தாயகம் வருவார் என்று காந்திருந்த சாந்தன், உயிரற்ற உடலாய் வந்து சேர்ந்துள்ளார். ஏழு தமிழர்களின் விடுதலையும் நீதியை தந்துவிட்டது என்று நாம் நினைத்திருந்த வேளையில், அந்த நீதி நிறைவேறாமல் முடிந்துவிட்டதை சாந்தனின் மரணம் உணர்த்தியுள்ளது.
இன்னமும் முருகன், ராபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் திருச்சி சிறையில் வாடுகின்றனர். மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஏழு தமிழர்களும் விடுவிக்கப்பட்டதே நீதிமன்றத்தின் தீர்ப்பு.
சாந்தனின் மரணத்தின் பின்னராவது அவர்களின் விடுதலையை இந்தியா உடன் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், அவர்களுக்கான மரண தண்டனை இப்படியாக நிறைவேற்றப்படுகிறது என்றே ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் எடுத்துக்கொள்ள நேரிடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 02 March, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.