இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நடத்திய சதி! இந்திய தலைவர் உடன் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ், அமைப்பின் இந்திய தலைவர் உட்பட அவரது சகா என இருவர் அசாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் நேற்றைய தினம் (20) அசாமில் வைத்து இந்திய சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களாதேஷிலிருந்து அத்துமீறி அசாமுக்குள் நுழைந்த மூவரையும் இந்திய சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஊடுருவி
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த இருவர் பங்களாதேஷில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் வடகிழக்கு மாநிலமான அசாமின் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அவர்கள் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பங்களாதேஷிலிருந்து அத்துமீறி புகுந்து அசாமின் துப்ரி மாவட்டத்திலுள்ள தர்மசாலாவில் பதுங்கியிருந்த ஹரிஸ் பரூக்கி, அவரது சகா ரேஹன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தீவிரவாத அமைப்பு
இதில் கைதான பரூக்கி என்பவர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இந்திய தலைவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இந்தியாவில் தீவிரவாத அமைப்பு வளர உதவியதாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியது மாத்திரமன்றி, பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக இந்திய அதிரடிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.