நீதிமன்றத்தில் கை மாறிய துப்பாக்கி...! செவ்வந்தியின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்
நீதிமன்றத்தினுள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி என இஷாரா செவ்வந்தி விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கி உள்ளார்.
நீதிமன்றத்தின் படிக்கட்டில் வைத்தே துப்பாக்கியை கமாண்டோ சமிந்துவுக்கு வழங்கியதாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில் பாரப்படுத்தப்பட்ட இஷாரா காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, கொழும்பு குற்றவியல் பிரிவு மற்றும் நேபாள காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இஷார செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே, ஜீவதாசன் கனகராசா, தக்ஸி நந்தகுமார், தினேஷ் ஷியமந்த டி சில்வா களுதாரா, கெனடி பஸ்தியன் பிள்ளை மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே என சிரேஷ்ட காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற சஞ்சீவ கொலையில் இஷாரா செவ்வந்தி பிரதான குற்றவாளியாவார்.
துப்பாக்கியை இடுப்பில் செருக்கி
செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தில், நீதிமன்றத்தின் படிக்கட்டில் வைத்தே குற்றவியல் சட்டக்கோவை புத்தகத்தில் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியை கமாண்டோ சமிந்துவுக்கு வழங்கியதாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியதாரியான கமாண்டோ சமிந்து துப்பாக்கியை இடுப்பில் செருக்கிக் கொண்டு செவ்வந்தியுடன் நீதிமன்றத்திற்குள் சென்று சட்டத்தரணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ குற்றவாளி கூண்டில் ஏறியபோது கமாண்டோ சமிந்து துப்பாக்கியை எடுத்து சஞ்சீவவை நோக்கி பிரயோகித்துள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரும் சஞ்ஜீவ மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று சத்தமிட்டவாறே வெளியில் ஓடிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
