இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது: ஐ.நா சுட்டிக்காட்டு
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 27-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.
கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
போர் நிறுத்தம்
எனவே காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல், ஹமாஸை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் செய்து போரை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி, விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தார் எனவும், இந்த தாக்குதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததுடன், ஹமாஸ் அமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் இந்த தாக்குதல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
"அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Gaza – Given the high number of civilian casualties & the scale of destruction following Israeli airstrikes on Jabalia refugee camp, we have serious concerns that these are disproportionate attacks that could amount to war crimes. pic.twitter.com/ky2jYVrhJq
— UN Human Rights (@UNHumanRights) November 1, 2023