போலியோ முகாம் தொடங்கும் முன் காசாவை தாக்கிய இஸ்ரேல் : ஒரே நாளில் 49 பேர் பலி
காசாவில் (Gaza) அடுத்தடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலஸ்தீன (Palestine) நகரங்களின் மீது கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் (Israel) நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் பெண்களும் மற்றும் குழந்தைகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள முகாம்
தொடர் போரால் காசா நகரம் முழுவதுமாக உருக்குலைந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களும் சுகாதார சேவைகளும் கிடைக்காமல் தொற்று நோய் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் காசாவில் உள்ள 6.4 லட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு முகாம் நடத்த முன்வந்தது.
இதனை முன்னிட்டு இன்று (01) முதல் மூன்று நாட்களுக்கு தினமும் எட்டு மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
ஆனாலும் நேற்றைய தினமே (31) பல இடங்களில் மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டன.
அடையாள முகாம்
இதனடிப்படையில், நேற்றைய தினம் (31) நாசர் மருத்துவமனை வார்டுகளில் அடையாள முகாம் நடத்தி சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.
இந்தநிலையில், நேற்றய தினம் காசாவில் இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மற்றும் சமூக நலப் பணியாளர்கள் சொட்டு மருந்து முகாம்களுக்கு தயாரான நிலையில், காசா பகுதியில் அமைந்த அகதிகள் முகாம்களில் ஒன்றான நசீரத் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒன்பது பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காசாவில் நேற்று (31) அடுத்தடுத்து தொடர்ந்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரே நாளிலில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |