இஸ்ரேல் எல்லைக்குள் ஆயுத கடத்தல்...! அதிரடியாக முறியடிக்கப்பட்ட சதித் திட்டம்
இஸ்ரேல் எல்லைக்குள் ட்ரோன் மூலம் 12 துப்பாக்கிகளைக் கடத்த முயன்ற சதித் திட்டத்தை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர்.
இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை (08-02-2026) அதிகாலை, ஜோர்தான் எல்லையிலிருந்து இஸ்ரேலிய வான்பரப்பிற்குள் நுழைந்த ட்ரோன் ஒன்றைக் கண்காணிப்பு அதிகாரிகள் கண்டறிந்து இடைமறித்துள்ளனர்.
இதன்போது முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த ட்ரோன் மூலம் கொண்டு வரப்பட்ட 12 அதிநவீன கைத்துப்பாக்கிகளை இராணுவத்தினர் மற்றும் எல்லைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பாதுகாப்புத் தரப்பினர்
மேலும் தெரியவருகையில், இஸ்ரேலிய வான்படை மற்றும் 96 ஆவது பிராந்திய பிரிவின் துருப்புக்கள் இணைந்து இந்த ட்ரோனைச் சுட்டு வீழ்த்தியதுடன், அதிலிருந்த ஆயுதங்களைப் பாதுகாப்புத் தரப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஜோர்தான் மற்றும் எகிப்து எல்லைகளின் ஊடாக ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்தும் முயற்சிகள் அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் பயங்கரவாதச் செயல்களுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், ட்ரோனை இயக்கியவர்கள் குறித்துத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எல்லைப் பகுதிகளில் இத்தகைய நவீன தொழில்நுட்பக் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க, அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் மற்றும் வான்வழித் தடுப்பு அமைப்புகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |