போர் நிறுத்தத்தை மறுத்த இஸ்ரேல்..! (புதிய இணைப்பு)
புதிய இணைப்பு
காசாவில் இருந்து எகிப்து செல்ல ஒரே வழியான ரபா எல்லைப் பகுதியை திறப்பதற்கு அனுமதி வழங்கபட்டதாகவும் தற்காலிமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், ஹமாஸிற்கு எதிரான போரில் இதுவரை போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதேவேளை, வெளிநாட்டினர் காசாவை விட்டு வெளியேறுவதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் மேலும் தெரவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
காசாவின் ரபா நகர் எல்லையை திறப்பதற்கு எகிப்துக்கு இஸ்ரேல் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் தொடங்கிய ஓரிரு நாளில் ரபா எல்லை அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியமையால் காசாவுடனான எல்லையை எகிப்து மூடியுள்ளது.
இதனால், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வருவதாக கூறப்படுகிறது
இஸ்ரேலின் அனுமதி
இந்தநிலையில், இந்த எல்லை வழியாக வெளிநாட்டு கடவுசீட்டு வைத்துள்ளவர்கள் வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதகாவும் உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவி பொருட்களை எகிப்து எல்லை வழியாக காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மற்றும் இஸ்ரேல் இடையே இன்று 10வது நாளாக போர் நீடித்து வருகிறது.
இதனால், மிக குறுகிய நேரம் மட்டுமே இந்த எல்லை திறக்கப்படும் எனவும், எகிப்துடனான எல்லை திறக்கப்படும்போது தெற்கு காசா பகுதியில் எந்த வித தாக்குதலும் நடத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும், ரபா நகர எல்லையை இன்று காலை 10 மணி முதல் தற்காலிகமாக திறக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பை கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும் ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.