உச்சக்கட்ட பதற்றம்: கோர முகத்தை காட்டும் இஸ்ரேல் - வீதிகளில் சிதறிக் கிடக்கும் உடல்கள்
காசா (Gaza) மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியுள்ளமை மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா நகரத்தின் பாரியளவிலான குடியிருப்பு பிரதேசமான சேக் ரத்வானுக்குள் இஸ்ரேலிய தாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் நுழைந்ததாக உள்ளூர்வாசிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.
வான், கடல், தரை என இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடப்பதாகவும் இரண்டு வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவையெனவும் காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டம்
நேற்று முன்தினம் காசாவுக்கு எதிராக தரைவழி தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டுமே 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை சுமார் 150 இற்கும் அதிகமான தடவைகள் காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இத் தாக்குதல்கள் பலஸ்தீனியர்களின் கூடார முகாம்கள், உயரமான கட்டிடங்கள் என அனைத்தையும் தரைமட்டமாக்கியது.
அதுமட்டுமின்றி சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன.
காசா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, அக்டோபர் 7, 2023 முதல் இதுவரை 65,062 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 165,697 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் இனப் படுகொலை
காசா நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காக புதிய வழித்தடத்தையும் இஸ்ரேல் திறந்துள்ளது. இந்த பாதை மூலம் காசா மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருவதோடு, இஸ்ரேலின் இந்த தரைவழித் தாக்குதல்களை வன்மையாகவும் கண்டித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேல் இனப் படுகொலை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
