பின்வாங்கப்போவதில்லை என இஸ்ரேல் அறிவிப்பு! தூக்கியெறியப்பட்ட ட்ரம்பின் போர் நிறுத்தம்
அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அறிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாடு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படும் அழுத்தங்கள் இருந்தபோதிலும், லெபனானில் இருந்து இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளை (IDF) திரும்பப் பெறுவதை இஸ்ரேல் எதிர்க்கிறது என்று கட்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நிலைப்பாடு
இதன் மூலம், லெபனான் அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டை ட்ரம்பிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்துடன் தொலைபேசியில் பேசியபோது தாமே அதை மீண்டும் வலியுறுத்தியதாகவும் கட்ஸ் கூறியுள்ளார்.
முழு பலத்துடன் தாக்குதல்
இஸ்ரேலின் மிக உயர்ந்த பாதுகாப்பு நலன்களிலோ அல்லது தங்களது குடிமக்களின் பாதுகாப்பிலோ தாங்கள் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், பாதுகாப்பு மண்டலங்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் கட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், லெபனானில் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பாக ஈரான் இஸ்ரேலைத் தாக்கினால், தங்களது முழு பலத்துடன் தாக்குவோம் என்றும், அதிகாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை தெளிவாக வெளிப்படுத்துவோம் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.