ஹமாஸை கூண்டோடு ஒழிக்க களமிறங்கியது 'பிசாசு' படை : இரத்த ஆறு ஓடுமென எச்சரிக்கை
இஸ்ரேல் மீது கடந்த 07 ஆம் திகதி திடீர் தாக்குதலை நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றும் 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பு அதற்கான விலையை தற்போது காசாவில் செலுத்திக் கொண்டிருக்கிறது.
ஹமாஸின் தாக்குதலால் சீற்றமடைந்த இஸ்ரேல் காசா மீது பயங்கரமான விமான தாக்குதலை நடத்திவருகிறது.இதனால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும் எண்ணிக்கையிலானோர் காயமடைந்தும் அவதிப்பட்டும் வருகின்றனர்.
மரணப்பொறி
காசா இப்பொழுது அம்மக்களுக்கு மரணப்பொறியாக மாறிக்கிடக்கிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.ஹமாஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்கும் வகையில் இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
இந்த தாக்குதல்களுக்காக உலகிலேயே மிகவும் ஆபத்தான படைப்பிரிவாக கருதப்படும் இஸ்ரேலின் 'பிசாசுப் படை' காசாவில் தரையிறங்கி இருக்கிறது. அவர்களுடன் சேர்த்து புதிதாக 6 பயங்கர படைப்பிரிவுகளை இஸ்ரேல் காசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுதான், ஹமாஸ் தீவிரவாதிகளை கூண்டோடு ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அனுப்பும் கடைசி அஸ்திரம் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிசாசுப் படை
இந்நிலையில்தான், ஹமாஸ் அமைப்பினரில் ஒருவர் விடாமல் தீர்த்து கட்டுவதற்காக 6 மிக ஆபத்தான படைப்பிரிவுகளை காஸாவுக்கு இஸ்ரேல் இராணுவம் அனுப்பியுள்ளது. அந்தப் படைப்பிரிவுகள் பற்றி இங்கு பார்க்கலாம். அதில் முக்கியமானது ரெஃபயிம் படை. ரெஃபயிம் என்றால் ஹெப்ரு மொழியில் பிசாசு என்று அர்த்தம். 2019-இல் உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பிரிவில் தரைப்படை, விமானப்படை, கடற்படை, ஆயுதப்படை, தற்காப்புக் கலை, சைபர் தாக்குதல் படை ஆகிய துறைகளில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் இருப்பார்கள். ஒரே நேரத்தில் பல பரிமாண தாக்குதல்களை இந்த பிசாசுப்படை நடத்தும்.
டுவ்டெவான் படை
இந்த டுவ்டெவான் படையானது முழுக்க முழுக்க தீவிரவாதிகளை அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட படைப்பிரிவு ஆகும். இந்தப் படையில் உள்ள வீரர்கள், எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் சென்று அங்கு பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை அழிக்கவும், தேவைப்பட்டால் அவர்களை உயிருடன் இஸ்ரேலுக்கு கடத்தி வரவும் செய்யும் திறன் பெற்றவர்கள். 2015-இல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாலஸ்தீனத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தீவிரவாத தளபதியை, அங்கேயே சென்று தட்டி தூக்கியவர்கள் இவர்கள்.
நாய் படை
இதேபோல, தாக்குதல் மற்றும் மீட்புப் பணியில் தலைசிறந்த யூனிட் 669, ஆகாய மார்க்கமாக தாக்குதல் நடத்தும் ஷயெடெட் 13, பொறியியல் படைப்பிரிவான யஹலோம், எதிரிகள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் பயிற்சி பெற்ற இராணுவ நாய்களை வைத்திருக்கும் ஒகெட்ஸ் படைப்பிரிவு ஆகிய படைப்பிரிவுகள் காசாவில் களமிறங்கி இருக்கின்றன.
இந்த 6 படைப்பிரிவுகள் சென்றிருப்பதால் காசாவில் இரத்த ஆறு ஓடும் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.