சந்திரயான் 3 இன் மீளெழுச்சி தோல்வியடையுமா...! இஸ்ரோவின் மூத்த அதிகாரிகளின் பதில்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கான சந்திராயன் 3 விண்கலம் மூலம் அனுப்பட்ட விக்ரம் லாண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை மீண்டும் செயற்படுத்துவதற்கான சாத்தியங்கள் தொடர்ந்தும் குறைவடைந்துவருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இஸ்ரோ நிறுவனத்தால் விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
புவி வட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23 ந் திகதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் வெற்றி பயணத்தை முடித்து கொண்டு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு பணிகளில் ஈடுபட்டது.
உறக்க நிலை
அதன் மூலம் கிடைத்த பல்வேறு தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.
ஒரு நிலவு நாள் முடிவடைந்து இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் சிவசக்தி புள்ளியில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.
அப்போது, நிலவின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருந்தது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியம் இல்லை.
இருந்தாலும் அவற்றை மீண்டும் 14 நாட்களுக்கு பிறகு அதாவது கடந்த 22 ஆம் திகதி நிலவில் உறக்கத்தில் உள்ள விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீது ஒரு நிலவு நாள் அதாவது 14 நாட்கள் முடிந்து தற்போது சூரிய ஒளி பட தொடங்கி உள்ளது.
மீட்டெழச் செய்யும் முயற்சி
இதனையடுத்து விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை மீட்டெழச் செய்யும் முயற்சிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆரம்பித்திருந்தனர்.
எனினும் நிலவில் காணப்பட்ட கடுமையான குளிரான வானிலையால் உறங்கு நிலையில் உள்ள இரண்டு கலங்களையும் மீண்டெழச் செய்வதற்கான செயற்பாடுகளில் கடும் சவால் ஏற்பட்டுள்ளதுடன், அந்த இரண்டு கலங்களுடனான சமிக்ஞைகள் இதுவரை கிடைக்கவில்லை என இஸ்ரோ கூறியுள்ளது.
இந்த நிலையில் விக்ரம் தரையிறங்கும் கலம், பிரக்யான் உலாவி ஆகியவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொரு மணிநேரமும் குறைந்து வருகின்றன என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரன்குமார் குறிப்பிட்டுள்ளார்.
தென் துருவத்தின் வெப்பநிலை
விக்ரம் தரையிறங்கும் கலம், பிரக்யான் உலாவி ஆகியவற்றில் பல்வேறு கூறுகள் உள்ளன எனவும் அவை நிலவின் கடுமையான குளிரான வெப்பநிலையில் தக்க வைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
சந்திரனின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள வெப்பநிலை மறை -200 பாகை செல்சியஸ் வெப்பநிலை முதல் மறை 250 பாகை செல்சியஸ் வரை செல்லும் எனவும் கிரண்குமார் கூறியுள்ளார்.
தரையிறங்கும் கலன் மற்றும் உலாவி ஆகியவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்வதாக இஸ்ரோவின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.