தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய தமிழரசுக்கட்சி அழைப்பு
தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி விடுத்த சந்திப்பில் பங்கேற்பதற்குத் தாம் இணங்கியிருப்பதாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.
அத்துடன் தமிழரசுக்கட்சியின் அழைப்பிற்குரிய பதிலை விரைவில் அனுப்பி வைக்கவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் குறிப்பிட்டுள்ளது.
வட, கிழக்கு தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பொதுவான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பொன்றை நடாத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி நவம்பர் மாதம் 7 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
உடன்படுவதாக தெரிவிப்பு
அக்கடிதத்துக்குக் கடந்த 20 ஆம் திகதி பதில் அனுப்பிய ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கம், தமிழரசுக் கட்சியுடனான சந்திப்பில் பங்கேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், டிசம்பர் மாதம் 7 ஆம் அல்லது 14 ஆம் திகதி சந்திப்பதற்குத் தாம் உடன்படுவதாகவும் தெரியப்படுத்தியிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள தமிழரசுக்கட்சி எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி சந்திப்பை நடாத்த முடியும் என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடப்படும் என தமிழரசுக்கட்சியின் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்காத நிலையில், அக்கடிதத்துக்கு வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாகப் பதில் அனுப்பிவைக்கப்படும் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |