தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவு: சுமந்திரன் படுதோல்வி! (மூன்றாம் இணைப்பு)
இலங்கத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.
புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தல் : வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம் (இரண்டாம் இணைப்பு)
தமிழர் தாயகத்தின் முன்னணி கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், சிறிலங்கா காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேர்தல் : வாக்கெடுப்பு ஆரம்பம் (முதலாம் இணைப்பு)
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தாமதமடைந்த நிலையில், தற்போது ஆரம்பமாகியுள்ளது.
திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பு, 11 மணியளவில் ஆரம்பமானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஆதரவாளர்களுக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாதபிரதிவாதங்கள் காரணமாக வாக்கெடுப்பு தாமதமாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதற்ற நிலை
இலங்கை தமிழரசு கட்சியின் 330 க்கும் மேற்பட்ட பொது சபை உறுப்பினர்கள் மாத்திரம் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
எனினும், இந்த கோரிக்கையை தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் நிராகரித்ததை அடுத்து, குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப. சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில், அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளனர்.
புதிய தலைவர் யார்
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், இன்றைய தினத்துக்குள் புதிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரகசிய வாக்கெடுப்பின் முடிகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின் போது உத்தியோகபூர்வமாக அவரது கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்ககெடுப்பில் தாமதம்: களத்தில் குழப்பநிலை
தமிழரசு கட்சியின் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (21) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் களத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தேர்தலில் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் மட்டும் வாக்களிக்காமல் ஏனையோரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்து முரண்பாடுகள் தான் இந்த குழப்ப நிலைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் (21) இடம்பெற்று வருகின்றது.
திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்களுமாக 336பேருக்கு அதிகமானவர்கள் வாக்களிக்க முடியும்.
இதுவரையில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வந்த தமிழரசு கட்சியின் தலைமை தெரிவு முதன்முறையாக தேர்தர் அடிப்படையில் முடிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |