முடிவெடுத்துவிட்டு எங்களை அழைக்க வேண்டாம்: தமிழரசுக் கட்சி தன்மானக் கட்சியாம்!
தமிழ் மக்களின் தன்மானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பழம்பெரும் அரசியல் கட்சியாக தமிழரசுக் கட்சி விளங்குவதாகவும், ஏனைய கட்சிகளோ அல்லது சிவில் அமைப்புகளோ தங்களது தீர்மானங்களை எடுத்துவிட்டு பின்னர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தால் அதில் பங்கேற்கப் போவதில்லை எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் இன்றையதினம் இடமபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சி பிரசன்னமாகாது
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் தன்மானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனித்துவமானதும் பழம்பெருமை மிக்கதுமான அரசியல் கட்சியாகும். தமிழரசுக் கட்சியின் தனித்துவமும் தன்மானமும் எந்த இடங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றதோ, அந்த இடங்களில் தமிழரசுக் கட்சி பிரசன்னமாகாது. இது எங்களுடைய உறுதியான நிலைப்பாடாகும்.

பழம்பெரும் கட்சியான தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தியோ அல்லது ஓரங்கட்டியோ தீர்மானங்களை எடுத்துவிட்டு, அதன் பின்னர் பகிரங்கமாக ‘வாருங்கள்’ என அழைப்பு விடுத்தால் எவ்வாறு நாம் அங்கு செல்ல முடியும்? அவ்வாறு அழைக்கப்படும் இடங்களுக்கு நாம் செல்லவும் மாட்டோம்.
தமிழரசுக் கட்சி யாராவது அழைத்த இடத்தில் சென்று அமருகின்ற கட்சி அல்ல. அதற்கென ஒரு தனித்துவமும் கௌரவமும் இருக்கின்றது. இதனை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
உறுதியான நிலைப்பாடு
தமிழரசுக் கட்சியை கடந்த காலங்களில் வழிநடத்தியவர்கள் முதுகை வளைத்து அரசியல் செய்தவர்கள் அல்லர். அவர்கள் முதுகை நிமிர்த்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள்.

அந்த வழியில் வந்த நாங்களும் வளைந்து செல்ல முடியாது. எங்களை மதிப்பவர்களிடம் ஒரு படி கீழிறங்கி சென்று பேசுவதற்கும், இணைந்து செயல்படுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் எங்களை மதிக்காதவர்களிடம் எங்களுடைய தன்மானத்தையும் கௌரவத்தையும் விட்டுக்கொடுத்து செயல்பட முடியாது.
தேவைப்பட்டால் ஒரு படி மேலே சென்று எங்களுடைய நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தவும் தயாராக இருக்கின்றோம். இதனை நான் ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.
கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |