சஜித்தின் மனம் நொந்துவிடாமல் தமிழரசுக் கட்சி எடுக்கும் நிலைப்பாட்டு நகர்வுகள்!
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை விவகாரம் வடக்கு - கிழக்கின் நில உரிமை, அடையாள அரசியல், இராணுவத் தலையீடு ஆகியவற்றை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியாகக் கருதப்படும் தமிழரசுக் கட்சியின் (ITAK) அணுகுமுறை பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் பொதுமக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் போராட்டங்கள், கைது, நீதிமன்ற தடை உத்தரவுகள் ஆகியவற்றை எதிர்கொண்டபோதும், அதே அளவிலான தீவிர அரசியல் தலைமையைக் காண முடியவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு.
நேரடி போராட்டங்களில் இருந்து விலகி நிற்பது, “சட்டப்படி பார்க்க வேண்டும்”, “பொறுமையாக அணுக வேண்டும்” என்ற மென்மையான அறிக்கைகள் மட்டுமே வெளியிடுவது, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை அரசியலை முன்னிறுத்தி கள அரசியலை தவிர்ப்பது, என்பவை மக்களிடையே அரசியல் விமர்சன எண்ணத்தை உருவாக்கியுள்ளது.
இராணுவ பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல், தமிழ் நிலங்களின் மெல்லிய அபகரிப்பு, வரலாற்று அடையாள அழிப்பு என நீண்ட கால அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில்தான் இங்கு எழுகிறது ஒரு கேள்வி...
தேர்தல் காலங்களிலும் சரி, அதற்கு அப்பாலும் சரி சஜித் தரப்புடன் ஒன்றினைந்து செல்லும் ஒரு போக்கை தமிழரசுக்கட்சி கொண்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
ஆக சஜித் தரப்பு என்னதான் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து குரல் கொடுத்தாலும் பௌத்த மத விவகாரங்களில் அரசாங்கம் பின்னடப்பு செய்வதை விரும்பப்போவதில்லை.
ஆக தையிட்டி விவகாரத்திலும் அவரின் போக்கு அதுவாகத்தான் இருக்கும் என்பது தமிழ்தேசிய அரசியல் விமர்சகர்களின் எதிர்வுகூறலாக அமைகிறது.
இதுவும் கூட சிறீதரன் மீதான உட்கட்சி அழுத்தத்துக்கு காரணமாகியிருக்கலாம் என்ற மற்றுமொரு கருத்தும் பேசப்படுகிறது.
அவ்வாறென்றால் தையிட்டி விவகாரத்தில் இருந்து முக்கிய உயர் தலைமைகள் பின்வாங்குவதும், சஜித் தரப்புடனான ஆதரவு நிலைப்பாட்டில்தானா? என்ற கேள்வியும் எழுகிறது மக்கள் மத்தியில்.
“நாங்கள் தெருவில் நிற்கும் போது, எங்கள் பிரதிநிதிகள் எங்கே” என மக்கள் எழுப்பும் கேள்விகளும் அதற்கான நடைமுறை அரசியல் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |