பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா
புதிய இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காக செல்வதாக வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு தெரிவித்தார்
அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லும்போது மக்கள் அவரை செல்ல விடாது தடுத்தனர். இருப்பினும் மக்களது எதிர்ப்பின் மத்தியிலும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
இரண்டாம் இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுக்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.
வீதியோரத்தில் உட்கார்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவ்விடத்திலிருந்து எழுப்பியுள்ளனர்.
இதேவேளை சாவகச்சேரியில் கூடும் பொதுமக்களை அடித்து விரட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரச நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த வைத்திய அதிகாரி மருத்துவ விடுமுறை எடுத்து வைத்தியசாலையில் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் தற்போது ஏ9 வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கில் கூடியுள்ள மக்கள் ''வேண்டும் வேண்டும் வைத்தியர் அர்ச்சுனா வேண்டும்'' என கோசமெழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டக்களத்தில் பெருமளவான காவல்துறையினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
யாழ் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கடை அடைப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டமானது இன்று (08.07.2024) குறித்த பகுதி சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அமைதியான வழியில் போராட்டம்
அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த காவல்துறையினர் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்ய முடியால் போனது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |