சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் குழப்பநிலை
புதிய இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த காவல்துறையினர் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யவில்லை.
இரண்டாம் இணைப்பு
சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் இரவோடு இரவாக பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டமையினால் பொதுமக்கள் வைத்தியசாலை முற்றுகையிட்டுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண நேற்று (07) இரவு குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.
பொது அமைப்பு
இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால் அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதுடன் இன்று (08) சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் இரவோடு இரவாக வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பலாத்காரமாக கைது செய்வதற்கு காவல்துறையினர் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர், சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் சென்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
பலாத்காரமாக கைது
அத்தோடு, வைத்தியசாலையின் பிரதான மின் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வைத்தியசாலையில் இருந்த ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் எந்நேரமும் பதற்றநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |