யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: திடீரெனப் பெய்யும் கன மழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் செல்வாக்கு காரணமாக இலங்கையின் பல பாகங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரெனப் பெய்யும் மழை காரணமாகத் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆற்றுப் படுகைகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம்
இதேவேளை தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு அதிகரித்துள்ளதாகவும், எனினும் அது வெள்ளப்பெருக்காக மாறவில்லை எனவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

களு கங்கை மற்றும் களனி கங்கை உள்ளிட்ட பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அநுராதபுரம், திருகோணமலை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, தெதுரு ஓயா மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 5,300 கனஅடி நீரும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு சுமார் 2,300 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |