யாழில் பிரபல விடுதியில் நடந்த போதை விருந்து: காவல்துறை விசாரணை தீவிரம் (படங்கள்)
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இரகசியமாக இடம்பெற்ற போதை விருந்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் இந்த போதைப்பொருள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மிகவும் இரகசியமாக நடைபெற்ற இந்த விருந்தில், ஒரு டிக்கட் 2000 ரூபாவிற்கும், ஜோடிகளாக கலந்து கொண்டால் நபருக்கு 1500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.
விருந்தில் பங்கேற்பவர்களுக்கு கழிவு விலையில் அறைகளும் ஏற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹெரோயின் பாவனை
சர்ச்சைக்குரிய போதை விருந்தில் சுமார் 54 தனி நபர்களும், 80 இளம் ஜோடிகளும் கலந்து கொண்டுள்ளனர். அன்றைய தினம் விடுதியில் இருந்து 13 அறைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
விருந்துக்கு வந்தவர்கள் அதிக பெறுமதியான மதுபானம் மற்றும் ஹெரோயின், ஐஸ், கேரளா கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும் யாழ்ப்பாண சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் கலாசாரங்களை சீர்கெடுக்கும் வகையில் இவ்வாறான விருந்துகளை தென்னிலங்கை அமைப்புக்கள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உடனடி விசாரணை
இந்நிலையில் சமூக சீர்கேடான இந்த செயற்பாடு குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள பல சிவில் அமைப்புகள் கோரிக்கையை விடுத்துள்ளன.
மேலும் இவ்வாறான சமூகவிரோத விருந்துகளை நடத்துவதை தடுத்து நிறுத்துவதும் அவ்வாறான விருந்துகளை நடத்துபவர்களை கைது செய்வதும் காவல்துறையினரின் பொறுப்பாகும் என அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.