யாழில் பாதிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவு வங்கிகளுக்கு: விடுக்கப்பட்டுள்ள உத்தரவு
யாழில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணக் கொடுப்பனவு மற்றும் ரூபா 25000.00 கொடுப்பனவு தொடர்பான முன்னேற்ற நிலமைகள் தொடர்பாக நேற்றைய தினம் (09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்களுடன் நிகழ் நிலை ஊடாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துரையாடினார்.
அறிவுறுத்தல்கள்
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் வரவு செலவு திட்ட சுற்றறிக்கை 08/2025 என்பவற்றின் பிரகாரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கு போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றின் பிரகாரம் கொடுப்பனவினை வழங்கல்.
கொடுப்பனவு
குறித்த கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைக்கு அமைய, கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மூலம் உரிய படிவத்தினை நிரப்பிய பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு கிராம மட்ட அலுவலர்களோ பிரதேச செயலாளர்கள்களோ காலநீடிப்பனை மேற்கொள்ள வேண்டியதில்லை.

வீட்டு உரிமை இல்லாதவர்களுக்கும் தற்போது வசிக்கும் பிரிவுக்குரிய குடும்ப பதிவு அட்டை இல்லாதவர்களுக்கும் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பொருத்தமான உறுதிப்படுத்தலுடன் கொடுப்பனவு வழங்கலாம்.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபா 25000.00 கொடுப்பனவு மற்றும் உலர் உணவுகள் வழங்குதலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் முதலாம் கட்ட பெயர்ப் பட்டியலை நாளை முதல் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கைகள்
தகுதியானவர்களின் பட்டியல்களை காட்சிப்படுத்திய பின்னர் காலதாமதம் இன்றி உரிய வங்கி கணக்கிற்கு விரைவாக வைப்பிலிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இக் கலந்துரையாடலில் நேரடியாக மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர் ஆ. நளாயினி மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |