யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் முக்கிய அறிவிப்பு
யாழ். போதனா வைத்தியசாலை (Teaching Hospital jaffna) விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிடத்தை நேற்று (24.4.2024) முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு
யாழ். மாவட்டத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அப்போது கொழும்பில் (colombo) மாத்திரமன்றி தெற்கு, வடக்கு, மற்றும் மத்திய மாகாணங்களிலும் சிறந்ததொரு வைத்தியசாலைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.
அத்தோடு நின்று விடாமல் அபிவிருத்தி செய்ய வேண்டிய ஏனைய பகுதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன் கடந்த முறை இங்கு வருகை தந்தபோது, நெதர்லாந்துத் தூதுவர் இந்த இரண்டு புதிய மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இங்கு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.
அதனால் இந்த வார இறுதியில் இங்கு வந்து இந்தச் செயற்பாடுகளை நிறைவு செய்யத் தீர்மானித்தேன் என ரணில் தெரிவித்துள்ளார்.
தேசிய வைத்தியசாலை
கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்நிலையில், யாழ். வைத்தியசாலையை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதாரக் கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியுமென ரணில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் ( Jaffna university) 46 வருடங்களின் பின்னர் 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |