யாழ். பழைய பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு : விடுக்கப்பட்ட எச்சரி்க்கை
தொன்மை வாய்ந்த யாழ்ப்பாணப் பழைய பூங்காவில் புதிதாக உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கான பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். நகரில் அமைந்துள்ள பல நூறாண்டுகள் ஆயுளையும் தாண்டிய மரங்களைக்கொண்ட ஒரேயொரு பூங்காவாக விளங்கிய பழைய பூங்கா ஏற்கனவே, தொலைநோக்குச் சிந்தனையின்றி அமைக்கப்பட்ட கட்டிடங்களால் குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைந்து போயுள்ளது. இந்நிலையில், தற்போது புதிதாக உள்ளக விளையாட்டு அரங்கை அமைப்பது பழைய பூங்காவின் உயிரை ஒரேயடியாகப் பறிக்கும் ஓர் மூடத்தனமான செயல் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
பழைய பூங்காவில் புதிதாக உள்ளக விளையாட்டு அரங்கை அமைப்பதற்கான அத்திவாரப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணத்தின் ஓர் தொன்மைவாய்ந்த அடையாளம்
யாழ்ப்பாணப் பழைய பூங்கா யாழ்ப்பாணத்தின் ஓர் தொன்மைவாய்ந்த அடையாளம் மாத்திரம் அல்ல, வாகன நெரிசல் மிக்க யாழ். நகரின் கரிக்காற்றை உறிஞ்சிச் சுத்தம் செய்யும் ஓர் பிரமாண்டமான காபன் வடிகட்டியாகவும் செயற்பட்டு வந்துள்ளது.

ஆனால், தொலைநோக்கற்ற, நீடித்து நிலைக்கும் பண்பற்ற அபிவிருத்தித் திட்டங்களால் தற்போது பழைய பூங்கா கட்டிடக் காடாக மாறியுள்ளது. ஆளுநர் செயலகம், நிலஅளவைத் திணைக்களம், நீர்வழங்கல் வடிகால் சபை, தேர்தல் திணைக்களம், கூடைப்பந்தாட்டச் சம்மேளனம், தொல்லியல் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகம் ஆகியனவற்றின் ஆக்கிரமிப்பில் பூங்கா ஏற்கனவே மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலேயர் காலத்தில் மீளப்பெற முடியாத அழியா நன்கொடையாக வழங்கப்பட்ட 9.67 ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்ட பழைய பூங்காவில் தற்போது எஞ்சியுள்ளது 5.19 ஹெக்டயர் நிலப்பரப்பு மட்டுமே ஆகும். மீதமாகவுள்ள இப்பகுதியில் கூடைப்பந்தாட்ட மைதானம், வலைப்பந்தாட்ட மைதானம் மற்றும் வாகனத்தரிப்பிடத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ஆகியனவற்றை உள்ளடக்கி 12 பரப்பளவில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளது. இது இயங்கத் தொடங்கும்போது பார்வையாளர்களின் வருகையின் பொருட்டு சூழ உள்ள பகுதியும் அபகரிக்கப்படும் அபாயமே உள்ளது. இந்த அழிப்பை அங்கே அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவால் ஒருபோதும் சமம் செய்யமுடியாது.
ஆளுநரின் முடிவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பழைய பூங்காவில் விடுதலைப்புலிகளின் காவல் துறை நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் அவர்களால் பூங்காவின் மரங்கள் அழிக்கப்படவில்லை. நிரந்தரக் கட்டுமானப் பணிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கின் தற்போதைய ஆளுநர் நா. வேதநாயகன் யாழ். மாவட்டச் செயலராகப் பதவி வகித்தபோது புதிய கட்டுமானப் பணிகள் எதனையும் பழைய பூங்காவில் அனுமதிப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவை எடுத்திருந்தார்.

இப்போது, அவர் ஆளுநராகப் பதவி வகிக்கும்போது புதிது புதிதாகக் கட்டிடங்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன. ஆளுநர் உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்தி, உள்ளக விளையாட்டு அரங்குக்கு மாற்று நிலத்தை ஏற்பாடுசெய்ய முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |