யாழில் பல்பொருள் அங்காடி மீது இனம் தெரியாத கும்பலால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்ற நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள தனியார் பல்பொருள் அங்காடி மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலக்கம் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு அங்காடி கண்ணாடிகளை வாளால் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பல்பொருள் அங்காடி உரிமையாளரால் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாள்வெட்டு குழுவினரின் அடாவடிகள் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறு காவல்துறையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.