நடுக்கடலில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பலுக்கு நேர்ந்த அனர்த்தம்
இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திலிருந்து (Nagapattinam) இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறைக்கு (Kankesanturai) புறப்பட்ட பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த கப்பலில் 17 ஊழியர்கள் உட்பட 95 பேர் பயணம் செய்த நிலையில் பயணிகள் அச்சமடைந்ததால் கப்பல் இடையிலேயே நாகப்பட்டினத்திற்கு திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக கடந்தாண்டு நவம்பர் 18ம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை
இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமான நிலையில் கடல் காற்று அதிகமாக வீசியதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் முதலாம் திகதி நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது.
கடலில் தத்தளித்த கப்பல்
வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் பயணித்த போது கடல் சீற்றம் அதிகமானதால் கப்பல் கடலில் தத்தளிக்க ஆரம்பித்த நிலையில் பயணிகள் சத்தமிட்டனர்.
வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலின் கப்டன் கப்பலை அவசர, அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு திருப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து நேற்றும் (2) இன்றும் (3) கப்பல் போக்குவரத்து இரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கப்பல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் இது போன்ற சம்பவம் நடந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
