இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!
பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மற்றும், அவருக்கு உதவிய நபர்களிடம் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திடுக்கிடும் சம்பவமொன்று வெளியாகியுள்ளது.
இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற விடயம் குறித்து அண்மைய நாட்களில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் தங்கியிருந்த இடங்களை அடையாளம் காட்டியிருந்தார்.
இந்த பின்னணியில் அவரை இந்தியாவுக்கு கடத்த ஆனந்தன் என்ற நபர் உதவியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இந்நிலையில் ஆனந்தன் என்பவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலரை கடல் வழியாக தப்பிச் செல்ல உதவியதாக தெரியவந்துள்ளது.
இது தொடடர்பில் தெரிய வருகையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் மேலும் பல தகவல் வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களையும் கடல் வழியாக தப்பிச் செல்ல ஆனந்தன் என்பவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், உதயபுரம், மூன்றாம் பாதையில் வசிக்கும் 29 வயதான ஏ.பி. ஆனந்தன் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த சந்தேக நபருக்கு கிளிநொச்சியில் உள்ள சொந்தமான வீட்டில் இருந்து மைக்ரோ வகை துப்பாக்கியையும் கொழும்பு குற்றப்பிரிவு மீட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் திஹாரிய, ஒகொடபொலவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பு
பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பிற குற்றவாளிகளை படகு மூலம் இந்தியாவுக்கு கடத்தும் வலையமைப்பின் பின்னணியில் உள்ள மூளையாக ஆனந்தன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனந்தன் தனது தம்பிகள் இருவருடன் இணைந்து இந்த மோசடியை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. கேரள கஞ்சா மோசடி தொடர்பாக அவரது தம்பிகள் இருவரும் தற்போது காவல்துறையின் தடுப்பு காவலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிகள் வழியாக மேற்கொள்ளப்படும் கேரள கஞ்சா வியாபாரத்திலும் இந்த சகோதரக் குழு ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவின் தலையீட்டால் சமீப காலங்களில் பிரதான குற்றவாளிகள் மற்றும் பாதாள உலக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் கடல் வழிகள் வழியாகத் தப்பிச் செல்ல இந்த நபர் உதவி செய்துள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் உதவி செய்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் யார் என்பதை மேலும் உறுதிப்படுத்தி வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 3 மணி நேரம் முன்
