உயர் பாதுகாப்பு வலயம் ஆகியதா யாழ்.மோட்டார் போக்குவரத்து திணைக்களம்?
யாழ்ப்பாணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தின் வாயிலானது உயர் பாதுகாப்பு வலயம் போன்று மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் உள்ளே செல்ல வேண்டுமாக இருந்தால் பாதுக்காப்பு உத்தியோகத்தரின் அனுமதியின் பின்னர் தான் உள்ளே செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உள்ளே பொதுமக்கள் செல்ல வேண்டுமாக இருந்தால் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் காரணத்தை கூறி, அவர் அனுமதி வழங்கிய பின்னரே உள்ளே செல்லக்கூடிய நிலை காணப்படுகிறது.
பாதுகாப்பு உத்தியோகத்தரிடமே அனுமதி
பாதுகாப்பு உத்தியோகத்தர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் பற்றிய முழுமையான அறிவு உடையவராக இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. ஆகையால் மக்கள் கூறுகின்ற பிரச்சினைகள் அவர்களுக்கு விளங்காமல் விட்டால் அவர்கள் உள்ளே செல்ல முடியாது.
சேவையை பெறுவதற்கு செல்கின்ற பொதுமக்கள் அனைவரும் தமது பிரச்சினைகளை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கூறித்தான் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும் என்ற நடைமுறை எந்த அரச திணைக்களங்களங்களிலும் இல்லை.
இவ்வாறான சூழ்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இவ்வாறான நடைமுறை காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் அமர்வதற்கு கூட வழியில்லை
அத்துடன், சேவைகளை பெறுவதற்கு வருகின்ற பொதுமக்கள் அமர்வதற்கு என திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பெற்றுள்ள ஆசனங்களிலும் அவர்களை அமர்வதற்கு அனுமதிக்காது அவர்களை வெளியே காக்க வைக்கின்ற நிலைமை அங்கு காணப்படுகின்றது.
இதனால் சேவையை பெறுவதற்கு வருகின்ற இளையோர் முதல் முதியோர் வரை கால்கடுக்க வெளியே காத்துக்கொண்டு இருக்கின்றமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்கு விரைவாக சேவைகளை வழங்காமல் தேவையற்ற விதத்தில் அவர்களை வெளியே காக்க வைத்து அவர்களின் நேரத்தை வீணடிப்பு செய்கின்றமையை அங்கு அவதானிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல்
இவ்வாறானதொரு பின்னணியில், மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களை இவ்வாறு வழி நடத்தல் என்பது மனித உரிமை மீறல் ஆகும்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் இவ்வாறான முறைகேடான செயற்பாடு குறித்து மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
