சிங்கள பேரினவாத அரசுகளின் தமிழர்கள் மீதான படுகொலைகளின் ஓர் அங்கம் நவாலிப் படுகொலை- நினைவேந்தல்!
யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுரு தேவாலயம் மீதான ஸ்ரீலங்கா விமானப் படையினரின் குண்டு வீச்சுத் தாக்குதலில் பலியானவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. எனினும் கொரோனா அச்சம் காரணமாக நினைவேந்தல் நிகழ்வுகள் எதுவும் இம்முறை இடம்பெறவில்லை.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிர் பிச்சை கேட்டு இறைவனின் பாதத்தில் தஞ்சமடைந்தவர்கள் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்ட நவாலி படுகொலை இடம்பெற்று இன்றுடன் 26 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. சிங்கள பேரினவாத அரசுகளின் தமிழர்கள் மீதான படுகொலைகளுக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படாத நிலையில், நவாலி படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் சொல்லொணாத் துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் 1995 ஆம் ஆண்டு யூலை மாதம் 09 திகதி அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை மற்றும் விமானத் தாக்குதல்களின் உதவியுடன் முன்னேறிப்பாய்தல் எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி புனித பேதுரு தேவாலயத்திலும் நவாலி சிறீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
அன்று திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசியதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே பலியானதுடன், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களின் நினைவாக நவாலி வடக்கு புலவர் வீதியிலும் நவாலி புனித பேதுறுவானவர் வீதியிலும் நினைவு சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.