இலங்கை போக்குவரத்துச் சபை விடாப்பிடி - முடிவுமின்றி நிறைவுற்றது ஆளுநருடனான கூட்டம்
யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்துவற்கு சாரதிகள் மறுத்துவரும் நிலையில், இது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்றது. எனினும் இந்தக் கூட்டமும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கடந்த மைத்திரி - ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 122 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் நெடுந்தூர போக்குவரத்திற்கான பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
எனினும் அந்தப் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்துச் சபை மறுத்து வருவதுடன், இலங்கை போக்குவரத்து சபை அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே தாமும் அதனைப் பயன்படுத்துவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில் புதிய நெடுந்தூர பேருந்து நிலையம் பயன்பாடற்று காணப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்திருந்தன.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக கலந்தரையாடும் வகையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளை இன்றைய தினம் தனது அலுவலகத்திற்கு அழைத்ததுடன், யாழ். மாநகர முதல்வரும் அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தக் கூட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட மறுப்பு தெரிவித்தனர்.
அதனை அடுத்து ஆளுநர் "மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. தனி நபர், குழுக்களின் சுயலாபத்திற்காக அதனை தேடுவாரற்று விட முடியாது" எனவும் நல்லதொரு முடிவாக எடுக்குமாறும் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் மாநகர முதல்வரும் வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து இலங்கை போக்குவரத்துச் சபை பிரதிநிதிகள் ஆளுநர் அலுவலகத்தினுள் தமக்குள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால், இன்று இடம்பெற்ற கூட்டம் எந்தவித முடிவுமின்றி நிறைவுக்கு வந்ததாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.