யாழ் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல்: இருவர் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) சிறைச்சாலைக்குள் உணவுப்பொதியினுள் கெரோயின் மற்றும் கஞ்சா கொண்டு செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு பொதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் சிறைச்சாலைக்குள் உணவு பொதிக்குள் மறைத்து போதைபொருள் கொண்டு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி (Kilinochchi) பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், போதைப்பொருள் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருக்கப்படும் அவரது கணவருக்கு ஐந்து மில்லி கிராம் கெரோயின் கொண்டு செல்ல முயற்சித்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் சிறைச்சாலை
இதையடுத்து, யாழ் சிறைச்சாலைக்குள் போதைபொருள் கொண்டு செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரின் நண்பர் ஒருவருக்கு ஐந்து மில்லிகிராம் கெரோயின் மற்றும் சிறிய தொகை கஞ்சா கொண்டு செல்ல முற்பட்ட வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர் இருவரையும் இன்று (07) யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
