சித்தன்கேணியில் அதிகரித்துள்ள போதைப்பொருள்- வட்டு.பொலிஸாரின் பொறுப்பற்ற தன்மை!
யாழ்ப்பாணம் சித்தன்கேணி பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் அப்பிரதேச இளைஞர்கள் மட்டுமல்லாது அயல் கிராமகளில் வசிக்கும் இளைஞர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகி சீரழிந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சித்தன்கேணி கீரிமலை வீதிக்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் பல காலமாக போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருதை பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அவதானித்துள்ளனர். அந்த வீட்டிற்கு தொடர்ந்து இளைஞர்கள் வந்து செல்வதால் சந்தேகமடைந்த மக்கள் குறித்த வீட்டை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இதன் போது அந்த வீட்டில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு வேளை அந்த வீட்டிற்கு 3 நபர்கள் சந்தேகப்படும் வகையில் சென்றுள்ளனர்.
அதனையடுத்து பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அலவாங்கு மற்றும் தடிகளுடன் சென்று குறித்த வீட்டை முற்றுகையிட்டு கலவரம் செய்துள்ளனர். இதன் காரணமாக குறித்த வீட்டிற்குள் இருந்து போதைப்பொரு பயன்படுத்திக்கொண்டிருந்த நபர்கள் பின்பக்க வழியாக தப்பிச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து மக்கள் உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தொலைபேசியூடாக அழைப்பெடுத்து சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர். சித்தன்கேணி பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகின்றது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைதந்தால் சந்தேக நபர்களையும் போதைப்பொருளையும் கைப்பற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதன் போது முதலில் சிங்கள் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தரே அழைப்பை எடுத்துள்ளார். தமிழில் பேசக்கூடியவரிடம் அழைப்பைக் கொடுக்கின்றேன் என அவர் தெரிவித்து தமிழ் பொலிஸ் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
தமிழ் பேசும் பொலிஸாரிடம் மக்கள் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் பொறுப்பற்ற முறையில் சித்தன்கேணியில் கலைநகரில் தானே இந்த சம்பவம் இடம்பெறுகிறது. அந்த வீடும் எங்களுக்குத் தெரியும் என கூறி தொலை பேசியை துண்டித்துள்ளார்.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் சித்தன் கேணி பிரதேசத்தில் கலைநகர் என்ற ஒரு பகுதியே இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் பொலிஸ் உத்தியோகத்தர் இல்லாத ஒரு ஊரின் பெயரை கூறியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவின் ஆளுகைக்குள் இருக்கும் பிரதேசம் ஒன்றில் என்னென்ன பகுதிகள் இருக்கின்றன என்பதே பொலிஸாருக்கு தெரியவில்லை இவர்கள் எப்படி எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள் என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் வட்டுக்கோட்டை பொலிஸார் இப்படி பொறுப்பற்ற முறையில் செயற்படுவது இதுவே முதல் முறை இல்லை எனவும் எப்போதுமே இவ்வாறே பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எவ்வாறான ஆபத்தான, அவசரமான நிலைமையில் இருந்தாலும் அழைப்பெடுத்தால் இவ்வாறு அலட்சியமாகவே பேசுவார்கள் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்திற்கு பொறுப்பாக இருக்கம் பொலிஸ் அதிகாரியின் அசண்டையீன போக்கே இதற்கு முற்றுமுழுதான காரணம் எனவும் ஆகவே அந்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.
ஆகவே வட்டுக்கோட்டை பொலிஸாரின் இவ்வாறான சமூகப்பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் ஆகியோர் கவனமெடுத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அது மட்டுமன்றி நாட்டு மக்கள் அனைவரையம் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பொலிஸாரின் இவ்வாறன அசண்டையீன செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரிளூடாக பேசி நடவடிக்கை எடுத்து இளைஞர் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.