அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிரடி அறிவித்தல்
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே எம்.பி அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) அறிவித்தல் விடுத்துள்ளது.
அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று(16) யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வழக்கு அடுத்த வருடம்(2025) பெப்ரவரி 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை
இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் அவர் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்று எம்.பி.யிடம் தெரிவித்துள்ளது.
மேலும், உரிய அனுமதியின்றி உள்ளே செல்ல முற்பட்டால், யாழ். காவல்துறையிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை ஒப்படைக்குமாறு வைத்தியசாலை தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |