யாழ் - கொழும்பு கடுகதி தொடருந்து சேவையில் சிக்கல் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
யாழ்ப்பாணத்துக்கான (Jaffna) கடுகதி தொடருந்து சேவை (08) நேற்று கல்கிசை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்காமை குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, கப்பல் துறை, சிவில் விமானசேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படாததன் விளைவாகவும் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை குறித்து வருத்தமடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான கடுகதி தொடருந்துசேவை நேற்று (8) அதிகாலை கல்கிசை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட நபரின் பதிவு
எனினும் கல்கிசையிலிருந்து ஆரம்பமாகவிருந்த தொடருந்து சேவை முன்னறிவிப்பின்றி அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் வகையில் மீள்திருத்தம் செய்யப்பட்டது.
அதன் விளைவாக அசௌகரியத்துக்கு உள்ளான பயணி ஒருவர், அவரது முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் பின்வருமாறு பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
”யாழ்ப்பாணத்துக்கான கடுகதி தொடருந்து சேவை செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை கல்கிசை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதிகாலை 5.25 மணியளவில் வெள்ளவத்தை தொடருந்து நிலையத்தை வந்தடையும் எனக் கூறப்பட்டிருந்தது.
🚨 Jaffna Intercity didn’t start from Mount Lavinia today. Rescheduled to start from Fort with no prior notice. No stop at Wellawatte. Passengers stranded at 5AM.
— Akshaiyan (@AkshaiyanSg) July 8, 2025
🎟️ Fare: LKR 3,600.@BimalRathnayake @anuradisanayake #SriLankaRail #Accountability
எனினும் அது முன்னறிவிப்பு எதுவுமின்றி இரத்துச்செய்யப்பட்டது. வெள்ளவத்தை தொடருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் வினவியதன் பின்னரே, யாழ் கடுகதி தொடருந்துசேவை அதிகாலை 5.45 மணிக்கு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் எனப் பதிலளிக்கப்பட்டது.
இதுகுறித்து முன்கூட்டியே ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படாததன் காரணமாக பயணிகள் பலர் அதிகாலையில் மிகச்சொற்ப நேரத்துக்குள் வெள்ளவத்தையில் இருந்து கோட்டை தொடருந்து நிலையத்துக்குச் செல்வதற்கு வாகனங்களின்றி மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர்.
இச்சம்பவம் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கும், குடும்பமாகப் பயணிப்பதற்கு தயாராக வந்திருந்தவர்களுக்கும் அநாவசியமான மனவழுத்தத்தையும், குழப்பத்தையும் தோற்றுவித்தது.
அதுமாத்திரமன்றி கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட கடுகதி தொடருந்து சேவைக்கான கட்டணமாக 3,600 ரூபா அறவிடப்படுகின்ற போதிலும், அந்த தொடருந்து இருக்கைகள் உடைந்த நிலையில் சீராகப் பராமரிக்கப்படாமலேயே இருந்தன. இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விசேட கவனம் செலுத்தவேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க
இதனையடுத்து குறித்த பயணியின் எக்ஸ் தளப்பதிவின்கீழ் பதிவின்கீழ் பதிலளித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “இதுகுறித்து நான் தொடருந்து திணைக்களத்திடம் கேட்டறிந்தேன்.
அவர்களால் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு யாழ்ப்பாணத்துக்கான கடுகதி தொடருந்து சேவை இன்றைய தினம் கல்கிசை தொடருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகவில்லை.
எனவே அதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும், தொடருந்து கல்கிசையில் இருந்து புறப்படுவதற்குத் தயார்நிலையில் உள்ளபோது மாத்திரம் அதுபற்றி பொதுமக்களுக்கு அறிவிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
அதுமாத்திரமன்றி இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கோரி அறிவிப்பொன்றை வெளியிடுமாறும் அவர்களிடம் வலியுறுத்தினேன்.
இவ்விடயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக அமைச்சின் சார்பில் வருத்தமடைகிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
