வவுனியா நோக்கி பரீட்சார்த்த பயணத்தை மேற்கொண்ட யாழ்தேவி! (படங்கள்)
யாழ்தேவி தொடருந்து, அனுராதபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து வவுனியா - ஓமந்தை தொடருந்து நிலையம் வரையில் இன்று (09) காலை பரீட்சார்த்தமாக பயணித்திருந்தது.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மகோ முதல் ஓமந்தை வரையான தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
இதன்போது அனுராதபுரம் - ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா - அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் தொடருந்து பாதையும், வவுனியா - ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் தொடருந்து பாதையும் புனரமைக்கப்பட்டன.
இந்த அபிவிருத்தி செயற்றிட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்றிட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, பரீட்சார்த்தமாக யாழ்தேவி தொடருந்து பயணித்திருந்தது.
15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பம்
அனுராதபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து காலை 10.23 மணியளவில் தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி தொடருந்து மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் ஓமந்தை புகையிரத நிலையத்தினை நோக்கி பயணித்து, மீண்டும் ஓமந்தை தொடருந்து நிலையத்திலிருந்து அனுராதபுரம் தொடருந்து நிலையம் வரை அதேவேகத்தில் பயணித்திருந்தது.
குறித்த தொடருந்து பயணத்தினை ஆரம்பித்ததிலிருந்து மதவாச்சி, வவுனியா ஆகிய இரு தொடருந்து நிலையங்களில் மாத்திரம் தரித்து நின்றது. தொடருந்தில் தொடருந்து திணைக்கள அதிகாரிகளும் பயணித்திருந்தனர்.
இதேவேளை, தொடருந்து பாதை புனரமைப்பு பணிக்காக கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட காங்கேசன்துறை - கொழும்புக்கான தொடருந்து சேவைகள் இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.