தெல்லிப்பளை வாள்வெட்டு விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை காவல்நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த ஹயஸ் வாகனமும் புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை (04) மாலை 5.30 மணியளவில் தெல்லிப்பழை காவல் நிலையத்திற்கு அருகில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது.
துப்பாக்கி பிரயோகம்
இதனையடுத்து வன்முறை கும்பல் ஹயஸ் வானில் மருதனார்மடம் நோக்கி தப்பிச் செல்லும் போது துரத்தி சென்ற காவல்துறையினர் மல்லாகம் பகுதியில் வாகனத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.
மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டது.
வாள்வெட்டில் காயமடைந்த 28 வயதான இளைஞர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இலக்கானவரின் வாக்குமூலம்
இந்நிலையில் தப்பியோடிய வன்முறை கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய யாழ்ப்பாண பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினர், காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினர், தெல்லிப்பழை காவல்துறையினர் ஆகியோர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், வாள்வெட்டுக்கு இலக்கானவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |