யாழ் பல்கலைக்கழக கட்டட திறப்பு விழாவை எதிர்த்து கல்விசாரா ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டடம் திறந்து வைத்தமையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று 24.05.2024 காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் மருத்துவபீடம் மற்றும் பல்கலைக்கழக பிரதான வளாக வாயிலில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர்.
கல்விசாரா பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 02.05.2024 நண்பகல் முதல் தொடர்ச்சியாக தொழிற்சங்க போராட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
இந்த நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றி சகல பல்கலைக்கழகங்களும் செயற்படாது இருக்கின்றவேளையில் எமது கோரிக்கைகளை தீர்த்துவைத்தலில் எவ்வித அக்கறையுமற்று காலங்கடத்தப்படுகின்றதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டினர்.
இருந்தபோதிலும் இவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்த புதிய கட்டிடத் தொகுதியானது அதிபர் ரணில், கல்வியமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்துவைக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.
இதனை யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டிப்பதோடு இச்செயற்பாடு எமது தொழிற்சங்கப் போராட்டத்தை மலினப்படுத்தும் செயற்பாடாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |