05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்படுத்திய இளைஞன்! யாழ்.மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணத்தில் 05 வயது சிறுவனை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அபி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த 05 வயதான சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கவர்ந்து சென்று பாலியல் துன்பறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
நீதிமன்ற உத்தரவு
வழக்கு தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட போது, எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து சிறுவனை கவர்ந்து சென்ற குற்றத்திற்காக 07 வருட சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்கு 12 வருட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

மேலும், 25 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்த மன்று, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 05 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |