யாழில் சர்ச்சையை கிளப்பிய யூரியூபர் கிருஷ்ணா: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த யூடியூபர் சில்லாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று அங்கிருந்த சிறுமி ஒருவரை ஏளனம் செய்யும் விதத்தில் பேசியதுடன், கட்டாயப்படுத்தி காணொளியும் எடுத்து தனது யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார்.
கைது நடவடிக்கை
குறித்த விடயமானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீண்டும் சில்லாலைக்கு சென்றவேளை அங்கிருந்த இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைப்பட்டார்.
இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை காவல்துறையினர் அவரை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இதையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவு
அந்தவகையில், அவரது விளக்கமறியல் திகதிகள் நிறைவுற்ற நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டு தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் இன்றையதினம் (23) விளக்கமறியல் திகதி நிறைவுற்றதையடுத்து மல்லாகம் நீதிமன்றத்தில் அவரை முற்படுத்தியவேளை ஆள் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
