இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு கப்பல் : சீனாவை தொடர்ந்து ஜப்பானின் நகர்வு
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் அகேபோனோ கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (28) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், 150.5 மீற்றர் நீளமுடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் கட்டளை அதிகாரி மாலுமி ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
நட்புறவை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள்
இந்த கப்பல் இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ள காலப்பகுதியில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளது.
இதனை தொடர்ந்து, அகேபோனோ கப்பல் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.