வெள்ளை மாளிகைக்கு டொனால்ட் ட்ரம்பை அழைத்துள்ள ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) ஜோ பைடன் (Joe Biden) வாழ்த்து தெரிவித்துள்ளதோடு வெள்ளை மாளிகையில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜோ பைடனுடன் சந்திப்பு
தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் தற்போதைய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராக வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வோஷிங்டனில் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், டொனால்ட் ட்ரம்பும் எதிர்வரும் புதன்கிழமை நவம்பர் 13 ஆம் திகதி காலை 11 மணியளவில் வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளனர்.
கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு, பதவியில் இருந்து விலகும் ஜனாதிபதி மற்றும் பதவிக்கு வரவிருக்கும் ஜனாதிபதிக்கு இடையேயான இத்தகைய சந்திப்பு அமெரிக்காவில் வழக்கமாக உள்ளது.
இது அமெரிக்காவில் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.
எனினும், கடந்த 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததும், அவர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை நடத்தவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு இதுதான் இவர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |