படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் 18ஆம் ஆண்டு நினைவு தினம்
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 18ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
தமிழ் பற்றாளர், ஊடகவியலாளர், மனிதஉரிமை செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல தளங்களில் கால் பதித்தவர் ஜோசப் பரராஜசிங்கம்.
1960களிலிருந்து தினபதி சிந்தாமணி சண் போன்ற பத்திரிகைகளுக்கு மட்டக்களப்பு செய்தியாளராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.
முதலாவது தலைவர்
கிழக்கு மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு என உருவாக்கப்பட்ட முதலாவது சங்கம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தான்.
இந்த சங்கத்தின் முதலாவது தலைவராக ஜோசப் தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2004ஆம் ஆண்டு வரை சமூக அரசியல் ஊடகத்துறை என பல மட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதை கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள்.
சூறாவளி பூராயம்
இவர் ஊடகத்துறையில் மட்டுமன்றி சமூக அரசியல் துறைகளிலும் சிறப்பாக செயற்படுவதற்கு அத்திவாரம் இட்டு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயற்பட்டவர்.
அக்காலகட்டத்தில் ஆளும் அரசியல்வாதிகளின் பக்க பலத்துடன் உயர் அதிகாரிகள் சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஊழல் மோசடிகளை ஆதாரங்களுடன் துல்லியமான தரவுகளுடன் 'சூறாவளி பூராயம்' என்ற தலைப்பில் ஜோசப் தொடர்கட்டுரை ஒன்றை சிந்தாமணியில் எழுதினார்.
புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை ஒரு சிறந்த உதாரணமாகும்.
படுகொலை
இறக்கும் வரை கொள்கையிலும் தமிழ் பற்றிலும் உறுதியாக இருந்த ஒரு உயர்ந்த மனிதராக ஜோசப் காணப்படுகின்றார்.
1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஜோசப் பரராசசிங்கம், தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் 1990ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாம் தம்பிமுத்து இறந்ததன் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
2005ஆம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கொலை செய்யப்பட முன் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக காவல்துறையினரால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2005ஆம் ஆண்டு நத்தார் தினம் அன்று மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தின் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்ட பொது ஜோசப் பரராசசிங்கம் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலையின் பின்னணியில் பிள்ளையானின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் கோட்டாபாய அதிபராக பதவியேற்று ஓரிரு மாதங்களில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |