ஊடகவியலாளர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
ஊடகவியலாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்றைய தினம் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவின் வேண்டுகோளின் பேரில் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியாராச்சியின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் உட்பட சில ஊடக நிறுவனங்களின் ஏராளமான ஊழியர்கள் ஏற்கனவே கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எதிர்காலத்தில் குறித்த துறையில் மேலும் பரவினால் பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவது கடினம் என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட குழுக்கள் சமீபத்தில் தடுப்பூசிக்கான கோரிக்கையினை முன்னதாக முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.