பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலை! - இங்கிலாந்தில் ஒருவர் கைது
2000ம் ஆண்டு பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை இங்கிலாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு பகுதியாக மேலதிக தகவல்களை வழங்குமாறு இங்கிலாந்தின் மெட்ரோபொலிட்டன் (Metropolitan) காவல்துறையினரின் போர்க்குற்ற விசாரணைக் குழு தகவல் கோரியிருந்தது.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்த 22ம் திகதி நார்தாம்ப்டன்ஷையரில் 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளதாக மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சர்வதேகுற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001இன் 51 வது பிரிவின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சந்தேகநபர் கைதுசெயயப்பட்டார் பின்னர் விசாரணையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிமலராஜன் குடும்பத்தினருக்கு இதனை தெரியப்படுத்தியுள்ள அதிகாரிகள் அவர்களிற்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் தொடர்கின்றன, இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை வழங்குபவர்கள் எவரிடத்திலிருந்தும் குறிப்பாக லண்டனிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்களிடமிருந்து விடயங்களை செவிமடுக்க தயாராக உள்ளோம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
