நீதிபதி உயிர்காக்க தப்பியோடும் நாட்டில் நீதி இருக்குமா...!
இலங்கையில் நீதித்துறை என்ற பெயரில் இருக்கும் துறை நீதியுடன் இல்லை என்பதை ஈழத் தமிழ் மக்கள் பன்னெடுங்காலமாகவே சொல்லி வருகிறார்கள்.
அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சறுத்தல் காரணமாக பதவி விலகியமையின் ஊடாக, இலங்கையில் நீதித்துறை என்பது மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பது இந்த உலகிற்கு தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஈழத் தமிழ் மக்கள் ஏன் சர்வதேச விசாரணையை கோருகிறார்கள்? இலங்கைக்குள் ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விகளுக்கும் இந்த நிகழ்வே தெளிவான பதிலையும் வெளிப்படுத்தியுள்ளது.
நீதிபதி பதவி விலகல்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா தனது நீதிபதி பதவியை இராஜினாமா செய்துள்ள நிகழ்வு இலங்கை அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில் உலகளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான தீர்ப்பினையடுத்து, ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே நீதிபதி பதவியினை விட்டு விலகுவதாக நீதிபதி ரி. சரவணராஜா குறிப்பிட்டுள்ளார்.
குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருப்பது இலங்கையின் நீதித்துறையின் உண்மை நிலவரத்தை காட்டுகிறது.
அத்துடன் தமிழர்களுக்கு எதிரான பேரினவாத கருத்துக்களை வெளியிட்டு அச்சுறுத்தி வரும் சரத் வீரசேகரவால் நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அவரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அந்த அச்சுறுத்தல் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் நிகழ்ந்துள்ளதையும் நீதிபதி கூறியிருக்கிறார்.
அத்துடன் அவரின் காவல்துறை பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிபதிக்கே இந்த நிலை?
அத்துடன் சட்ட மா அதிபர் தன்னை சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளையை மாற்றியமைக்க வேண்டும் என்று நிர்பந்தித்தாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
இப்படியான அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சறுத்தல்கள் காரணமாக தாம் மிகவும் நேசித்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா தெரிவித்திருப்பது, நேர்மையான ஒரு நீதிபதி இலங்கைத் தீவில் எப்படியான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு தக்க சாட்சியாக உள்ளது.
அத்துடன் நீதிபதி ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண ஈழத் தமிழ் மக்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதையும் உலகம் புரிந்துகெள்ள வேண்டிய இடமும் இதுவாகும்.
அரசின் அச்சுறுத்தல்களால், சிங்களப் பேரினவாத தலைவர்களின் அச்சுறுத்தல்களால் ஒரு நீதிபதி உயிரை பாதுகாத்துக்கொள்ள நாட்டை விட்டு புலம்பெயர்கின்ற நிலை இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்தும் ஈழத் தமிழ் மக்கள் வாழ்கின்ற நிலவரம் குறித்தும் ஏன் ஈழத் தமிழ் மக்கள் இலங்கையை விட்டுப் புலம்பெயர்கின்றார்கள் என்பது குறித்தும் உலகத்திற்கு பெரும் புரிதலை ஏற்படுத்தும் செய்தியாகும்.
அத்துடன் நீதிபதியின் இந்த தீர்மானம் ஈழத் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை சிங்களத் தலைவர்கள் சிலர் கண்டித்தாலும் இதற்குப் பின்னால் உள்ள உண்மை நிலவரத்தை முழுமையாக உணரவும் ஏற்கவும் அவர்களால் இயலாது. அது பேரினவாதிகளுக்கு இன்னமும் இத்தகைய அடக்குமுறைகளை செய்யவே வழி செய்யும்.
குருந்தூர் மலை விவகாரம்
சைவமும் தமிழும் தழைத்தோங்கிய ஈழ மண்ணில் குருந்தூர்மலை ஆதி அனாதிகாலம் தொட்டு ஈழத் தமிழர்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த இடமாகும். அங்கு ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்திருந்தது.
கடந்த சில வருடங்களின் முன்னர் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வின் போது அங்கு எண்முகலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனையொத்த சிவலிங்கங்கள் தமிழ்நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.சிவபூமி எனப்படும் ஈழ நிலத்தில் சிவாலயங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழர்களின் தாயகப் பகுதியில் இத்தகைய சான்றுகள் கண்டுபிடிக்கப்படுவது புதியதல்ல. ஆனால் மேற்படி கண்டுபிடிப்பை சிங்கள பௌத்தத்துடன் இணைத்து இலங்கை தொல்லியல் திணைக்களம் புதிய கதை எழுதியிருந்தது.
அத்துடன் அங்கு பாரிய பௌத்த விகாரை ஒன்றை கட்டும் முயற்சியில் ஈடுபட்ட வேளை அதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்தது. இருந்த போதும் தடையுத்தரவையும் மீறி அங்கு பாரிய விகாரை கட்டி முடிக்கப்பட்டது.
அங்கே தமிழ் மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத அச்சுறுத்தல் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இந்த விடயத்தில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமைகளை தடுக்க முடியாது என்று நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.
அங்கு பாரிய அச்சறுத்தலின் மத்தியிலும் தமிழர்கள் பொங்கல் வழிபாட்டைமேற்கொண்டனர். என்ற போதும் இயல்பான வழிபாடுகளை அங்கு மேற்கொள்ள முடியாத பேரினவாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவி வருகின்றது.
சரத் வீரசேகரவின் மிரட்டல்
இந்த நிலையில் குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய விவகாரத்தில் நீதிபதி ரி. சரவணராஜா வழக்குகளின் அடிப்படையில் நேர்மையுடன் நடந்துகொண்டார்.
அங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற ஈழத் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துவதில் அவர் நீதியுடன் செயற்பட்டார்.
ஆனால் சிறிலங்கா காவல்துறை தரப்பால் நீதிமன்றக் கட்டளைகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டன என்பதை குருந்தூர்மலையில் பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பு அடாவடிகளின் போது கண்டோம்.
இந்த நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பேரினவாதி சரத் வீரசேகர, இது சிங்கள பௌத்த நாடு என்பதை முல்லைத்தீவு நீதிபதி மறந்துவிடக்கூடாது என்றும் வடக்கு கிழக்கில் பௌத்த உரிமைகளை பாதுகாக்க அனைத்து மக்களும் திரள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் முல்லைத்தீவு நீதிபதி ஒரு மனநோயாளி என்றும் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு வேறு ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் இவர் கூறியதுடன், குருந்தூர் மலையில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுண்டு என்றும் பகிரமங்கமாக இலங்கை நாடாளுமன்றத்தில் எச்சரித்திருந்தார்.
இப்படி பகிரங்கமாக இவர் எச்சரிக்கின்றார் என்றால், மறைமுகமான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் எறந்தளவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும்? இலங்கையில் நீதிபதி ஒருவருக்கு அரசின் சட்ட உயரிடமான நாடாளுமன்றத்தில் வைத்து இப்படி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதனை அரசின் சார்பில் எவரும் தடுக்கவும் இல்லை. கண்டிக்கவும் இல்லை. ஏனெனில் இலங்கை அரசின் பிரதிநிதியாகவே சரத் வீரசேகர இதனை செய்திருக்கிறார். அப்படி என்றால் நீதிபதி தனது பதவியை துறந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டிய நிலைதானே ஏற்படும்?
இலங்கையில் நீதி உண்டா?
இலங்கைத் தீவில் நீதித்துறை என்பது சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழின ஒடுக்குமுறைக் கருவியாகவே செயற்படுகிறது என்பதை நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் எடுத்துரைக்கின்றது.
அத்துடன் இலங்கையில் நீதித்துறை என்பது நீதியாக செயற்பட்டிருந்தால் ஈழத் தமிழ் மக்கள் மீது பேரினவாத ஒடுக்குமுறை இடம்பெற்றிருக்காது. ஈழத் தமிழ் மக்களும் நம்பிக்கை இழந்து ஆயுதத்தை கையில் எடுத்திருக்க வேண்டிய நிலைமையும் வந்திருக்காது.
மாறாக இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புக்கு இலங்கை நீதித்துறையே காவலாக இருந்தது என்பதையும் ஈழத் தமிழர் தரப்பு நெடுங்காலமாக சுட்டிக்காட்டி வருகிறது. இந்த நிலையில்தான் 2009இல் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதியை ஈழத் தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள்.
பேரினவாத கொள்களை வளர்க்கவும் தமிழர் தேசத்தை ஒடுக்கவும் ஒரு நீதிபதிக்கு இவ்வளவு அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் மிகவும் பகிரங்கமான முறையில் அதுவும் நாடாளுமன்றத்தில் இருந்தே ஏற்படுத்தப்படுகின்ற இலங்கையில் ஈழத் தமிழர்கள் தமக்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்காக ஒருபோதும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஈழத் தமிழர்களின் அந்தக் கோரிக்கை மிகுந்த நியாயமபானது என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் உலகம் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாக சர்வதேச நீதியையே ஈழத் தமிழினம் கோருகிறது.
உண்மையில் நீதிபதி ஒருவர் தனது தீர்ப்புக்காக உயிர் அச்சுறுத்தல்களால் பதவி துறந்து நாட்டை விட்டு தப்பியோடும் தேசத்தில் நீதி என்பது இருக்குமா?
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 02 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
