மயிலத்தமடுவில் பெரும்பான்மை இனத்தவரின் அடாவடி தீவிரம்
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக 18 தினங்களாக தங்களது நில மீட்புக் கோரிய அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதிகளி்ல் பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் தங்களுடைய கால்நடைக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையை கபளீகரம் செய்து நிலங்களை பதப்படுத்துவதும் புற்கள், மரங்கள் போன்றவற்றை தீவைத்து அழிக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துமீறிய நடவடிக்கை
இதேவேளை தாங்கள் தங்களுடைய கால்நடைக்கான நிலத்தை கேட்டு வீதியில் அறவழிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் சிங்கள பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய காணிக் கொள்ளை அதிதீவிரமாக தற்போது இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் கூட தங்களது காணிகளை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
காவலரண் அமைத்து இருக்கும் காடையர்களை வெளியேற்றுவதாக இராஜாங்க அமைச்சர்கள் பெறுமதிமிக்க வாக்குறுதிகளை அளித்தாலும் இன்றும் கூட பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களின் அத்துமீறிய நடவடிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.






