இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: விரைவில் ரணிலிடம் ஒப்படைக்கப்படவுள்ள அறிக்கை
முல்லைத்தீவு நீதவான் சரவணராஜா பதவி விலகியமை தொடர்பிலான விசாரணைகளின் முழுமையான அறிக்கை விரைவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதவி விலகல்
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.
அதேவேளை, சிறிலங்கா நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகத்துக்கு சரவணராஜா அவரது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை
இந்த நிலையில், நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டமை சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்குமாறு அதிபர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
இதற்கு அமைவாக, நீதிபதிக்கு காணப்பட்ட உயிரச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமான முழுமையான விசாரணைகளை தற்போது காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகளுக்கு புலனாய்வுப் பிரிவினரின் உதவிகளும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் விரைவில் முழுமையான அறிக்கை அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.