மட்டக்களப்பில் நிறைவுக்கு வந்த போராட்டம் : 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
புதிய இணைப்பு
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த போது நீர்த்தாரை பிரயோகிக்கின்ற வாகனங்கள் உட்பட பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
நாங்கள் அரச அதிபரை சந்திப்பதற்கு முயற்சித்த போதும் அவர் வரவில்லை, ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை எனவும் 5 பேரை மட்டுமே சந்திக்க முடியும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அவற்றைக் கடந்து அரச அதிபரைச் சந்தித்த போதும் அது திருப்திகரமானதாக அமையவில்லை.
அத்துடன் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய 11 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நான் உட்பட சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத் தலைவர், பண்ணையாளர் சங்கத் தலைவர், விவசாய சம்மேளனத் தலைவர் மற்றும் எங்களுடன் களத்தில் நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் சிறிநாத் உட்பட 11 பேருக்கு எதிராக இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தப் போராட்டத்தை முடிவு நிலைக்கு கொண்டு வந்து நாங்கள் போராட்டக் களத்திலிருந்து வெளியேறியுள்ளோம். ஆனாலும் மயிலத்தமடு, மாதவனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.
நீதிமன்ற கட்டளைகளுக்கு மதிப்பளித்து மாவட்ட செயலக வளாகத்தில் இருந்து வெளியேறுகின்றோம்” என தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தரக் கோரி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நுழைவாயிலை மறித்து இன்று (02) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் போது, தங்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் தனது அலுவலக அறையிலிருந்து வெளியில் வந்து சந்திக்க வேண்டும் எனப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு அவர் வெளியில் வரத் தவறும்பட்சத்தில், பேச்சுவார்த்தைக்காகச் செல்லும் பண்ணையாளர்களின் பிரதிநிதிகளுடன் ஊடகவியலாளர்களையும் மாவட்ட செயலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
எனினும், குறித்த நிபந்தனைகள் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாததால், மாவட்ட செயலக நுழைவாயிலை முற்றுகையிட்டுப் பண்ணையாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலாம் இணைப்பு
மேய்ச்சல் தரை உரிமை கோரி மட்டக்களப்பில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்!
மயிலத்தமடு - மாதவனை உட்பட கிழக்கு மாகாணத்தின் மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக்கோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (02.11.2026) காலை10 மணியவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
மயிலத்தமடு, மாதவனையில் தொடர்ந்துவந்த இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினை தற்போது திருகோணமலையிலும் உருவெடுத்துள்ள நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
இதன்போது, மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பை உடன் நிறுத்து, நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து, எமது மேய்ச்சல் நிலங்களை எமக்கு தா போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் செ.கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் இ.சிறிநாத், கந்தையா பாஸ்கரன், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றம் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாதவனை மற்றும் மயிலத்தமடு புல்மேடு பகுதிகளை நம்பி வாழும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தங்களது கடுமையான கவலைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |











