லசந்த விக்ரமதுங்க படுகொலை : சட்டமா அதிபரை சாடும் சுமந்திரன்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் கூறுவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உதலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க சிபாரிசு செய்திருப்பது குறித்து கண்டனங்கள் வலுத்திருக்கின்றன.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இவ்வாறானதொரு பின்னணியில் குறித்தவொரு குற்றவியல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள், அவ்விசாரணை அறிக்கைகள் மற்றும் சாட்சியங்களை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் அவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா, இல்லையா எனும் தீர்மானத்தை சட்டமா அதிபரால் மேற்கொள்ளமுடியும்.
அதேபோன்று சட்டமா அதிபர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, அதில் அரசாங்கம் தலையீடு செய்யக்கூடாது எனவும், மாறாக சட்டமா அதிபர் சுயாதீனமாக இயங்குவதை உறுதிசெய்யவேண்டியது அவசியம்.
லசந்த விக்ரமதுங்க
இருப்பினும் சட்டமா அதிபரின் அண்மைய தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்திருக்கும் நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுவிக்குமாறு கூறுவது பொருத்தமானதல்ல என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்னமும் இவ்வழக்கில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என விசனம் வெளியிட்ட அவர், இதுகுறித்த விசாரணைகளை விரைவுபடுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டியது அவசியம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)