ஆதரவை விலக்கியது கூட்டணி கட்சி : கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடி..!
கனடாவில்(canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) தலைமையிலான சிறுபான்மை லிபரல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை விலக்குவதாக அறிவித்துள்ள நிலையில் எந்த நேரமும் அரசாங்கம் கவிழலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜக்மீத் சிங் என்பவர் தலைமையில் இயங்கும் புதிய ஜனநாயகக் கட்சியே அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றுள்ளது.
ஆனால், ஆட்சிக்கு ஆபத்து அல்லது தேர்தல் உருவாகும் சூழல் எதுவும் தற்போது ஏற்பட வாய்ப்பில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ட்ரூடோ அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடி
இருப்பினும், பட்ஜெட்டை நிறைவேற்றவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் புதிதாக ஒரு கட்சியின் ஆதரவை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022 முதல் லிபரல் அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஜஸ்டின் ட்ரூடோவால் எதிர்கட்சியான கன்சர்வேடிவ்களை எதிர்கொள்ள முடியவில்லை என ஜக்மீத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மிக மோசமான பின்னடைவு
2022ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2025 வரையில் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்திற்கு புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவளிக்கும். பதிலுக்கு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
2015 நவம்பர் முதல் ஆட்சியில் இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, தற்போது மிக மோசமான பின்னடைவை சந்திப்பார் என்றே ஆய்வுகளில் தெரிய வருகிறது. புதிய ஜனநாயகக் கட்சியின் அழுத்தம் காரணமாகவே தேசிய அளவிலான பல் சுகாதார திட்டம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |